உங்களைப் போலவே
சாத்தானின்
எல்லையற்ற ஆசீர்வாதங்களோடும்
கடவுளின்
தீராத சாபங்களோடும்
பிறந்துவிட்ட
என்னை மட்டும்
பெண் என்கிறீர்கள்
உங்கள் பிரியங்களை
மடியிலிட்டு
தடவி
தழுவி
பச்சையாகவே
புசிக்கத் துடிக்கும்
என் பசியை
திமிர் என்கிறீர்கள்
உங்களைச் சமைத்து
உங்கள் பசித்த வயிறுகளுக்கு
படையலிடும் என் போக்கை
ஆணவம் என்கிறீர்கள்
உங்கள் தோல்விகளை
ஏவாளின் ஒரேஆடையென
திரும்பத் திரும்ப
அணிந்து அணிந்து
உங்களைச் சாய்ப்பதை
காமம் என்கிறீர்கள்
என் அவிழ்தலில் பிறக்கிறது
உங்கள் தோல்வி
எங்கள் வெற்றி
பெண் சிசுக்களாய்.