பவழமல்லி
ரத்திகா எழுத்துகள்
Tuesday, 27 December 2011
என் சொற்கள்
வெடிகளாய்ப் பற்ற வைத்து
வீசியெறிவேன்
என் சொற்களை
உனது இருண்ட கானகமெங்கும்
நீ எரிந்து
நான் எரியும் வரை
இங்கு பிரியங்களுக்கும்
பிரிதலுக்குமான
காரணங்கள்
ஒன்று போலவே இருக்கின்றன
மிக மிக அபத்தமாக.
Wednesday, 21 December 2011
கிரகணம்
மூடிக்கொண்டே வருகின்றன
என் விரல்களை
உன் விரல்கள்
என் கைகளை
உன் கைகள்
என் இமைகளை
உன் இமைகள்
என் இதழ்களை
உன் இதழ்கள்
என் நெற்றியை
உன் நெற்றி
என் நெஞ்சை
உன் நெஞ்சு
என் உடலை
உன் உடல்
என் உயிரை
உன் உயிர்
இவ்வுலகை
நம் உலகு
இடையூறுகள் எதுவுமின்றி
இங்கே
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
ஒரு
பூரண கிரகணம்.
Friday, 16 December 2011
சுகஓர்மை
பெரு மரத்தின் நுனிக்கிளையில்
ஒரு தேன்சிட்டு அமர்ந்து
ஊஞ்சலாடுவது போல
அவ்வளவு சுகமாக இருக்கிறது
உன்னைப் பற்றிய நினைவுகள்
பனிக்கால ஆறு
ஊடல் குறைக்கும் மார்கழி மாதம்
கொஞ்சம் நெருங்கவிடு என்னை
நடுக்கம் குறைப்பேன்
பின்
பனிக்கால ஆறுகளுள் ஒன்றென
உறைந்து கிடப்போம்
காலப் போர்வைக்குள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)