Sunday, 13 November 2011

பவழமல்லி மரங்கள்



இனியொருமுறை
ஒரு பவழமல்லி மரத்தை
அவ்வளவு எளிதாக
நீங்கள் கடந்து சென்றுவிட முடியாது


இனி
எங்கேனும்
ஒரு பவழமல்லி மரத்தை
நீங்கள் காண நேரிட்டால்
நிறைவேறாதுபோன
உங்கள் உன்னதக் காதலொன்றை
அதன் செவிகளில் ஓதுங்கள்


அல்லது
தொலைவான் விண்மீனொத்த
பவழமல்லிப் பூவின்
வெண்ணிற இதழ்கள்போல அன்பில் சுடர்ந்து
அதன் செந்நிறக் காம்புகள் போல
துயரில் முடிந்துபோன
காதல் கதையொன்றைப் பாடல்களாக்கி
தன் சமூலம் முழுவதும் இசைத்துக் கொண்டிருப்பதை
செவிமடுத்துக் கேளுங்கள்


காற்றின் சுவடுகளொத்த
காதையொன்றால்
கனத்துக் கிடக்கிறது
இப்பவழமல்லி மரம்


வரலாறு தவறவிட்ட
அவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது
பசுங்குடை விரித்துக் காத்திருக்கும்
இதோ இப்பவழமல்லி மரத்தின் கீழ்தான்


ஆதிக்கனி புசித்த
ஆதாம் ஏவாளின்
முதல்நாள் மனநிலையை
அவர்கள்
அடைந்ததும்
கடந்ததும்
இதோ இப்பவழமல்லி மரத்தின் கீழ்தான்


பருவங்களைப் பற்றியபடி
படர்ந்துகொண்டிருந்த
அவர்கள் உறவின் மொழிகளில்
மெய்சிலிர்த்து
அவர்களின் மீது பூக்களைச் சொரிந்ததும்
இதோ இப்பவழமல்லி மரம்தான்

பின்பு
மரபு இட்ட எச்சங்களின் நச்சு நெடியில்
புலன்கள் திணறி
ஒரு மாரிக்காலத்தின்
இருண்மையை
ஈரத்தை
விழிகளிலிருந்து வேர்களுக்கு வார்த்துவிட்டு
அவர்கள்
உடல்களால் பிரிந்து சென்றதை
ஊமையாய் பார்த்து நின்றதும்
இதோ இப்பவழமல்லி மரம் தான்


இன்றும்
அவர்களின் ஈர மொழிகளை
தன் இலைகளிலும்
பூக்களிலும்
எழுதியெழுதி
உதிர்த்துக் கொண்டேயிருக்கின்றன
ஒவ்வொரு பவழமல்லி மரமும் 


இனியொருமுறை
ஒரு பவழமல்லி மரத்தை
அவ்வளவு எளிதாக
நீங்கள் கடந்து சென்றுவிட முடியாது.

No comments:

Post a Comment